02. அப்பூதி அடிகள்





சோழ நாட்டிலே திங்களூர் என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தில் உதித்தவர் அப்பூதி அடிகள். எப்பொழுதுமே இறை சிந்தனைக் கொண்டவர். மனைவி, மகனுடன், எல்லா இறைத்தலங்களுக்கும் சென்று தவறாது வழிபடும் அருந்தவத்தினர். தீய எண்ணங்களும், குணங்களும், அறவே அற்றவர். திருநாவுக்கரசரின் மேன்மையைக் கேள்விப்பட்டு அவர்பால் எல்லையில்லா அன்பும், மதிப்பும், கொண்டிருந்தார். தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என பெயர் சூட்டி மகிழ்ந்தார். தம்மால் கைங்கர்யம் செய்யப்பட்ட மடங்கள், தண்ணீர்ப்பந்தல், சாலைகள், குளங்கள், என அனைத்திற்கும் நாவுக்கரசர் பெயரிட்டு இன்பம் கண்டார். அப்பர் பெருமானை நேரில் காணாமலேயே அவர்மேல் அளவற்ற அன்பு கொண்டார். அப்பர் பெருமான் ஒருமுறை இறைவனை தரிசிக்க திங்களூர் தலம் எய்தினார். திங்களூர் வந்த திருநாவுக்கரசர் அங்கு மக்களுடைய தாகத்தைத் தீர்த்து தங்கிச்செல்ல நிழல்தரும் தண்ணீர்ப்பந்தலைக் கண்ணுற்றார். அப்பந்தலின் எல்லாபுறமும் திருநாவுக்கரசு என்ற பெயர் இருப்பதைக் கண்டார்.
              
இதைக் கண்ட அப்பரடிகள் வியப்புடன் அங்கிருந்த ஒருவரிடம் இப்பந்தலை அமைத்து தொண்டு செய்பவர் யார் என வினவினார். அவர் பதிலளிக்கும் வகையில், ஐயனே, இதை மட்டுமல்ல, அவர் அமைத்துள்ள மடங்கள், சாலைகள், வெட்டியுள்ள குளம் அத்தனைக்கும் திருநாவுக்கரசர் பெருமான் பெயரையே சூட்டி மகிழ்வடைந்துள்ளார், அன்னாருடுடைய திருநாமம் அப்பூதி அடிகள் என்பதாகும் என்றார். திருநாவுக்கரசருக்கு அப்பூதி அடிகளைக் காண வேண்டும் என்ற அவா மிக, அங்குள்ளோரைப் பார்த்து அப்பூதி அடிகளார் வீடு எங்குள்ளது என்று வினவினார்.
               
அங்குள்ள அடியவர்கள் அப்பரை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகள் இல் நோக்கிச்சென்றனர். தம் வீட்டினருகே சிவனடியார் ஒருவர் அடியார்கள் புடைச்சூழ தம் இல் நோக்கி வருவதைக்கண்ட அப்பூதி அடிகள் பெருமகிழ்ச்சி கொண்டார். வாயிலுக்கு ஓடிச்சென்று அடியவரை அன்புடன் வரவேற்றார். தன் வீட்டினுள்ளே எழுந்தருள வேண்டினார். அடியவரை வீட்டினுள்ளே ஆசனத்தில் அமரச்செய்து, தன் மனைவி, மகன், அனைவருடன் கூடி, அடியவர் பாதத்தில் புனிதநீர் சாற்றி, பாதபூஜை செய்து அளவற்ற ஆனந்தம் கொண்டார். இவரது பக்தியைக் கண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் அடிகளைப் பார்த்து ஒரு வினா எழுப்பினார். அடிகளாரே தாங்கள் செய்யும் அத்துணை தான தர்மங்களுக்கும் கைங்கரியங்களுக்கும் உம்முடைய பெயரினை வைக்காமல் வேறு யாரோ ஒருவருடைய பெயரிட்டு மகிழ்கிறீர்களே, இது ஏன் என்றார்.
                  
அப்பூதி அடிகளுக்கு நெஞ்சு பதைப்பதைத்தது. கோபத்தீ கணல் கொண்டது. ஆயினும் அவற்றையெல்லாம் மனதினுள் அடக்கிக்கொண்டு, பெரிய சிவனடியாராகக் காட்சி அளிக்கிறீரே உமக்கு நாவுக்கரசு சுவாமிகளைப்பற்றி தெரியாதா உலகறியும் அவரைத் தாம் அறியவில்லையா சமணத்தில் உழன்ற மன்னனை தம் ஆற்றலால் சைவநெறிக்கு மாற்றிய மாண்புடையவர் அல்லவா. கல்லைக் கட்டி கடலினிலே வீசியபொழுதும், நமச்சிவாயமே என்று மிதந்து கரைகண்டவர் அல்லவா என்று   இவ்வாறாக அவருடைய பல சிறப்புக்களை எடுத்துக்கூறி, அவரை அறிந்திராத தாங்கள் யார் என்று வினவினார். அப்பூதி அடிகளின் எல்லையற்ற அன்பினைக்கண்ட அப்பர் பெருமான் அடிகளை நோக்கி அடியனே அந்த திருநாவுக்கரசர் என்று பணிவுடன் மொழிந்தார்.
                  
பதிலைக் கேட்ட மாத்திரத்தில் அப்பூதி அடிகள் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தம்மை மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் இருவரும் அன்பின் பெருக்கால் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். தம் மனைவி மற்றும் மக்களை அப்பருக்கு அறிமுகம் செய்தபின் அப்பூதி அடிகள் அவரைத் தம் இல்லத்தில் விருந்துண்ண வேண்டினார். அதற்கு திருநாவுக்கரசபெருமானும் மகிழ்வுடன் இசைந்தார். அப்பூதி அடிகளாரின் மனைவியார் அறுசுவையுடன் கூடிய நால்வகை உணவுகளைத் தயாரித்தார். தம்முடைய மூத்த குமாரன் மூத்ததிருநாவுக்கரசனை அழைத்து அப்பர் அடிகளார் உணவு உண்ண தோட்டத்து வாழை இலையைப் பறித்து வர பணித்தார். மூத்ததிருநாவுக்கரசு வாழை இலை பறிக்குங்கால், அம்மரத்தைப் பற்றியிருந்த ஓர் அரவம் அவனைத் தீண்டியது. வலிமிகுந்தாலும், உடலில் நீலம் பாய்ந்தபோதிலும், அடியவருக்கு உணவிடுதல் தடைப்படக்கூடாது என்ற நோக்கில் சிறுவன் சிந்தை கலங்காது தாயை அடைந்து இலையை ஒப்படைத்துவிட்டு நிலத்தில் சாய்ந்தான். பெற்றோர் ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் செய்வதறியாது திகைத்தனர். துயரத்தின் உச்சிக்கே சென்றுவிட்ட போதிலும் நாவுக்கரசருக்கு உணவிடுதலில் குந்தகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கொள்கை பிடிப்பால், தன்  மகனது உயிரற்ற உடலை ஓர் பாயினில் சுருட்டி ஓர் கலத்தில் வைத்தனர். நெஞ்சினிலே துயரத்தினை மறைத்து, போலி மகிழ்ச்சியினை வரவழைத்துக்கொண்டு நாவுக்கரசரை விருந்துண்ண அழைத்தனர்.
                 
விருந்துண்ண அமர்ந்த திருநாவுக்கரசர் மூத்த மகன் மூத்ததிருநாவுக்கரசு, இல்லாததைக் கண்டார். மூத்த மகனையும் உணவு உண்ண அழைக்குமாறு அப்பூதி அடிகளிடம் கூறினார். அப்பூதி அடிகள் எவ்வளவு முயன்றும் அவரால் உண்மையை மறைக்க முடியவில்லை. அழுதுகொண்டே நடந்தவற்றை விவரித்தார். இதைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் பெரும் வேதனை அடைந்தார். உடனே எழுந்து அப்பூதி அடிகளுடன் இறந்த சிறுவனின் உடலைக் காணச் சென்றார். நிலையறிந்து வருந்திய அப்பர் பெருமான், சிறுவனது உடலுடன் திங்களூர் இறைவன் சன்னதிக்கு வருமாறு அப்பூதி அடிகளைப் பணித்தார். அப்பூதி அடிகள் தனது மகனின் உயிரற்ற உடலைச்சுமந்து செல்ல, ஊர் மக்களும் அவருடன் சேர்ந்து கொண்டு கோயிலை அடைந்தனர். அப்பர் பெருமான் திங்களூர் பெருமானைப் பார்த்து “ஒன்று கொல்லாம்” என்னும் பதிகத்தை மெய்யுருக பாடி சிறுவன் உயிர் பிழைக்க வேண்டினார். நாவுக்கரசர் பக்தியினாலே பரமனுடைய அருளொளி பிறந்தது. சிறுவன் உறக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தான். நாவுக்கரசரின் மகிமையைக் கண்டு வியந்து அனைவரும் அவரை பலவாறு போற்றித் துதித்தனர்.
                  
அனைவரும் சேர்ந்து அப்பூதி அடிகளின் இல்லத்தை அடைந்தனர். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து திருநாவுக்கரசு பெருமானுடன் அமுதுண்டு மகிழ்ந்தனர். பின்னர் சிலகாலம் அப்பரடிகள் அப்பூதி அடிகளார் இல்லத்தில் மகிழ்வோடு இருந்து, பின்னர் அப்பூதி அடிகளாரின் திருத்தொண்டினை சிறப்பித்து பாடி திருப்பழனம் ஏகினார். அப்பூதி அடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு திருத்தொண்டும், இறைத்தொண்டும், செய்து முடிவில் தில்லைக்கூத்தனின் திருவடி நீழலைச் சேர்ந்தார்.

                             
திருச்சிற்றம்பலம்.
    


Comments