03. அமர்நீதி நாயனார்




அமர்நீதி நாயனார்

               பழையாறை என்னும் பதியில் வணிகர் குலத்தில் அமர்நீதியார் என்ற சிவபக்தர் தோன்றினார். தம் குலத்தொழிலான வணிகத்தில் மேம்பட்டு, பெரும்பொருள் ஈட்டி சீரும்,சிறப்புமாக விளங்கினார். பொன்,மணி,வைரம் போன்ற பொருட்களுடன், வெளிநாட்டினருடன் வாணிபத் தொடர்பும் கொண்டு ஊரார் போற்ற சிறப்புடன் வாழ்ந்து வந்தார். அமர்நீதியார் தம் இல்லத்திற்கு வரும் சிவனடியார்களுக்கு நல் அமுது படைத்து, பின் அவர்களுக்கு அரைத்துண்டும், கோவணமும் கொடுத்து மகிழ்வதை ஒரு கோட்பாடாகவே கொண்டு வாழ்ந்து வந்தார்.

                பழையாறைக்குப் பக்கத்திலுள்ள திருநல்லூர் என்னும் சிவதலத்தில் எழுந்தருளியுள்ள நீலகண்டபெருமானுக்கு ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். அமர்நீதியார் அங்கு தொண்டுபுரிய ஒரு மடம் கட்டினார். விழாவிற்கு வெள்ளமென வரும் பக்தர்களுக்கும், அடியவர்களுக்கும் மடத்தில் தங்கி நல்ல பணிகள் பல புரிந்தார். அமர்நீதியாரின் சிறப்பை உலகறியச்செய்ய திருவுளம் கொண்டார் எம்பெருமான்.

                  அந்தண பிரமச்சாரி போன்ற உருவம் தாங்கி அமர்நீதியார் மடத்திற்கு ஏகினார் அம்பலத்தரசன். அந்தணரைக் கண்ட அடிகளார் அவரை அன்போடு வரவேற்று பலவாறு உபசரித்தார். அந்தணர் உருவிலிருந்த இறைவன் அடியாரிடம், நீர் அடியார்களுக்கு அமுதளித்து பின் துண்டும்,கோவணமும் கொடுப்பதாய் கேள்வியுற்றேன், அதனால் நேரில் கண்டு செல்ல வந்தேன் என்று இயம்பினார். இதனைச் செவியுற்ற அடியார் மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்தணரைப் பார்த்து, அந்தணர்க்களுக்காக தனியாக வேதியரைவைத்து சமையல் செய்கிறோம், எனவே தாங்கள் அருள்கூர்ந்து திருவமுது கொள்ள வேண்டும் என்று வேண்டினார். அந்தணரும் புன்முறுவலுடன் அதை ஏற்றுக்கொண்டார். பின்னர் அந்தணர் உருவிலிருந்த ஈசன் அம்ர்நீதியாரிடம், யாம் காவிரியில் நீராட சென்று வருகிறோம், வானம் மப்பும் மந்தாரமுமாய் இருப்பதால் என்னிடமுள்ள இரண்டு கோவணத்தில் ஒன்றை உம்மிடம் கொடுத்துச் செல்கிறேன். மழை வந்தாலும் நனையாமல் இருக்க பத்திரமாகப் பாதுகாத்து நாம் நீராடி வந்த பிறகு என்னிடம் கொடுங்கள் என்றார். மேலும் அவர் அமர்நீதியைப் பார்த்து இது சாதாரண கோவணம் அல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று, மிகவும் கவனமாக வைத்திருக்கவும் என்று கூறி தன் தண்டத்திலிருந்து ஒரு கோவணத்தை அமர்நீதியிடம் கொடுத்துவிட்டு பின் காவிரியில் நீராடச்சென்றார்.

                  அமர்நீதியார் பாதுகாப்பாக அக்கோவணத்தை மற்றவற்றுடன் கலக்காமல் பத்திரமாக தனியாக வைத்தார். தில்லைக்கூத்தனுக்குத்தான் திருவிளையாடல் பிடிக்குமே, எனவே தான் கொடுத்த கோவணத்தை மாயமாய் மறையச்செய்தார். அத்துடன் நிற்கவில்லை. பெரு மழையை வரவழைத்து தான் நனைந்துகொண்டே அமர்நீதியார் மடத்தை அடைந்தார். அவரைக்கண்ட அடியார் பதைபதைத்து உடலைத் துவட்டிக்கொள்ள துண்டைக்கொடுத்தார். இறைவனோ நான் நன்றாக நனைந்துவிட்டேன், அதனால் உடுத்திக்கொள்ள நான் கொடுத்த கோவணத்தை முதலில் கொண்டுவாரும் என்று பணித்தார். இறைவனின் திருவிளையாடலை அமர்நீதியால் எவ்வாறு அறிந்து கொள்ள இயலும். எங்கு தேடியும் அக்கோவணம் காணவில்லை. மனைவி முதல் மற்ற அனைவரையும் கேட்டுப்பார்த்தார். எங்கும் காணவில்லை. அனைவரிடமும் கலந்தாலோசித்து மற்றொரு அழகிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, நெஞ்சு பதைபதைக்க சோகத்துடன் வேதியர் முன் நின்று, கண்ணில் நீர் மல்க, ஐயனே தவறொன்று நடந்து விட்டது, நீர் அளித்த கோவணம் காணவில்லை, அதற்குப் பதிலாக விலையுயர்ந்த இக்கோவணத்தைப் பெற்றுக்கொண்டு அடியேனை மன்னிக்க வேண்டும் என வேண்டி தொழுதார்.

                  இதனைக் கேட்ட உடனேயே அந்தணர் உருவில் வந்த ஈசன் மிகுந்த சினத்துடன், அமர்நீதியைப் பார்த்து, சற்று முன் கொடுத்த கோவணம் எப்படி காணாமல் போகும், அது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் தாம் அதைக் கவர்ந்து கொண்டு வேறொன்றைக் கொடுத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர். நீர் அடியவர்களுக்கெல்லாம் கோவணம் கொடுக்கிறீர் என்று ஊரெல்லாம் முழங்குவதின் உண்மை இப்பொழுதுதான் புரிகிறது, ஏமாற்று வாணிபம் செய்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறீர், என்று பலவாறு ஏசினார். இதனைச் செவியுற்று அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், ஐயன் என்னை மன்னித்தருள வேண்டும். இது அறியாமல் நடந்த பிழை. தாங்கள் என்னை மன்னித்து அதற்கு ஈடாக நான் தரும் பொன்னையும் மணியையும் பெற்று சாந்தமடைய வேண்டும் என்று பலவாறு இறைஞ்சினார். அந்தணரை வீழ்ந்து வணங்கினார்.

                  சினம் தணிந்தார் போல் பாவனை செய்த வேதியர், தன்னுடைய நனைந்த மற்றொரு கோவணத்தைக்காட்டி, நீர் எனக்கு பொன்னும் பொருளும் ஒன்றும் தரவேண்டாம், இந்த கோவணத்திற்கு ஈடாக வேறொன்று கொடுத்தால் போதும் என்று கூறினார். சற்று அமைதி அடைந்த அமர்நீதியார் உள்ளேச்சென்று துலாக்கோல் கொண்டு வந்தார். அந்தணரிடமிருந்து தாம் பெற்ற கோவணத்தை ஒரு தட்டிலும், தாம் கையில் வைத்திருந்த விலையுயர்ந்த  கோவணத்தை ஒரு தட்டிலும் வைத்தார். இறைத்தட்டு கீழேயும் அடியார் தட்டு மேலேயும் இருந்தது. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்காக கொடுக்க வைத்திருந்த அவ்வளவு கோவணங்களையும் எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாகவில்லை. மாயைக்கண்டு வியந்தவண்ணம் நூல்பொதிகளையும், பட்டாடைகளையும், தம்தட்டில் வைத்தார். அப்பொழுதும் சிவனார் தட்டு தாழ்ந்தே இருந்தது. அடியாரின் பக்திக்கு முன் இறைவனின் சோதனை தாழ்ந்திருப்பதனையே இந்நிலைக் காட்டியது. இறைவனின் விளையாட்டை யாரால் புரிந்து கொள்ள முடியும். தன்னிடமுள்ள அத்தனை பொன்,வைரம்,நவமணி, முதலானவற்றையும் தட்டில் வைத்தார். அப்பொழுதும் வேதியர் தட்டே தாழ்ந்திருந்தது. முடிவில் செய்வதறியாது திகைத்து, ஆலவாயனை மனதாரத்துதித்து, வேதியரை நோக்கி ஐயனே நான் அனைத்தையும் வைத்துவிட்டேன், ஆனால் உமது கோவணத்திற்கு ஈடாகவில்லை, எனவே நானும் எனது குடும்பத்தாறும் இத்தட்டில் உட்கார்ந்து ஈடுகொடுக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டினார்.

                  வேதியர் அனுமதிக்க ஈசனை உள்ளம் உருகி வேண்டி, நாங்கள் உண்மையான பக்தியுடன், நேர்மையுடனும்,சத்தியத்துடனும்,இதுகாறும் வாழ்ந்தது உண்மையானால், துலாக்கோல் சமனடைய வேண்டும் என்று வேண்டி, தானும்,மனைவியும்,மகனும், ஒவ்வொருவராக கண்மூடி ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்மூடி நமச்சிவாய மந்திரத்தை ஓதினர். கண்திறந்து பார்க்கையில் தட்டு சமநிலை அடைந்திருந்தது. ஆனால் வேதியர் அங்கு இல்லை. அந்தணரைக் காணாது அனைவரும் வியக்குங்கால், வானவீதியில் அம்மையப்பன் உமாதேவியுடன் இடபவாகனத்தில் காட்சியளித்து, அமர்நீதியாரை வாழ்த்தி அருளினார். இறைவனின் அருளால் துலாத்தட்டு புழ்பகவிமானமாய் மாறி அவர்கள் அனைவரையும் கயிலங்கிரியில் இறைவன் திருவடி நீழலில் சேர்த்தது.
                                         
ஓம் நமச்சிவாயம்.

Comments