05. ஆனாய நாயனார்

ஆனாய  நாயனார்
சோலைகள்  மிகுந்த  மழநாட்டிலே  திருமங்கலம்  என்ற  ஓர்  ஊர்  உள்ளது. இவ்வூரில் எழுந்தருளியிருக்கும்  இறைவனுக்கு  சாமவேதீஸ்வரர், திருமழுவுடைய தாயனார், என்று இன்னும்  பல திருநாமங்கள்  உண்டு. இவ்வூரில் ஆயர்குடியில்  குலவிளக்காய்  ஆயனார்  என்னும்  அடிகளார் அவதரித்தார். ஆநிரைகளை  நிரம்பப் பெற்றிருந்ததால்  ஆனாயர் என்ற  சிறப்புப் பெயர் பெற்றார். இவர் தம் குலத்தொழிலைக் கைக்கொண்டிருந்தபோதும், எப்பொழுதும் மனத்தாலும், வாக்காலும், மெய்யாலும், சிவபெருமானையே நிலைநிறுத்தியிருந்தார். ஆனாயர் வேய்ங்குழல் வாசிப்பதில் சிறந்த கலைஞர். ஆநிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் பொழுதும், மாலையில் திரும்ப அழைத்து வரும்போதும் வேய்ங்குழல் வாசித்துக்கொண்டே இருப்பார். நமசிவாய என்னும் ஐந்தெழுத்தினை வேய்ங்குழலில் நன்கு அமைத்து இசைப்பதில் வல்லுநர். கண்ணனின் குழலோசைக்கு அனைத்து உயிரும் கட்டுண்டிருப்பதுபோல் ஆனாயரின் குழலிசைக்கும் உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும்.
ஒரு நாள் வழக்கம் போல் நாயனார், நறுமண மாலைகளைச் சூடிக்கொண்டு தலையில் கண்ணி மாலையைச் சூட்டிக்கொண்டு, செவியில் செங்காந்தட்பூவினை சொருகிக்கொண்டு, காலிலே தோல்பாதுகையை அணிந்து கொண்டு, கையினிலே கோலும்,குழலும் எடுத்துக்கொண்டு, ஏவலர்களும்,ஆயர்களும் புடைச்சூழ ஆநிரைகளை மேய்த்துக்கொண்டு முல்லை நிலத்திற்கு ஏகினார். அப்பொழுது கார்காலம் ஆகையால் முல்லை நிலம் பூத்துக்குலுங்கியது. கொன்றை மரங்கள் புதுமலர்களை ஏந்திய வண்ணம் இனிமையாக காட்சி அளித்தன. மலர்களின் நறுமணத்தில் ஆனாயர் தன்னை மறந்தார். குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி இன்னிசை மழை பொழிந்து கொண்டிருந்தார்.
கொன்றை மரத்தின் மலர்கள் கொத்துகொத்தாக மாலைப்போல் அமைந்து தொங்கிக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஆனாயர், எப்பொழுதும் சிவசிந்தையிலே இருப்பதால் கொன்றைமரத்தின் வடிவம் ஈசன் கொன்றை மலர்மாலையை அணிந்து காட்சி கொடுப்பது போலவே தெரிந்தது. அத்திருத்தோற்றச் செம்மையில் சிவனையே நேரில் கண்டது போல் பெருமகிழ்ச்சி அடைந்தார். அவரது ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. அம் மரத்தினை வலம் வந்து தொழுதார். தம்மிடமிருந்த குழல்களிலேயே சிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அம்பலவாணரை எண்ணி பண் ஒன்று இசைக்கத்தொடங்கினார். ஐந்தெழுத்தை அடிப்படையாய் வைத்து, அனைவரும் மயங்கும் வகையில் வேய்ங்குழலை இசைத்தார். ஆனாயர் இசைக்கு மயங்கி ஆநிரைகள் மேய்வதை விடுத்து அவர் அருகில் கூடின. கன்றுகளோ பால்பருகுவதை மறந்து இசையை இரசித்தன. மான் கூட்டங்கள் துள்ளி வந்து ஆனாயரைச் சூழ்ந்தன. பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆயர்கள் தத்தம் வேலைகளை மறந்து ஆனாயரது இசை வெள்ளத்தில் மூழ்கினர். விண்ணவர்களும் புட்பக விமானத்தில் அமர்ந்து ஆனாயரின் தேனிசையைப் பருகினர்.
சிங்கமும் யானையும் தம் பகை மறந்து ஒன்றாக இசையில் மூழ்கின. புலியும் மானும் தம்முடைய இயல்பை மறந்து ஆனாயரின் இசையில் திளைத்தன. துள்ளிப் பாய்ந்தோடும் அருவி கூட சலனமின்றி அமைதியாக ஓடின. மேகக்கூட்டம் வானிலே இடி மழையின்றி அமைதியுடன் ஊர்ந்தன. காற்றும் இரைச்சலின்றி இனிமையாக வீசியது. அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் ஆனாயரின் இசையில் கட்டுண்டு தம் இயல்பை மறந்தன. அனைத்து உலக உயிர்களும் ஆனாயரின் வேய்ங்குழல் இசையில் இனிமை கண்டன. மண்ணிலிருந்து புறப்பட்ட ஆனாயரின் குழலிசை விண்ணகரத்திற்கும் சென்று இறுதியில் கயிலாயத்திலுள்ள எம்பெருமான் திருச்செவிகளுக்கும் சென்றடைந்தது. இசையால் வசமான ஆலவாயன் ஆனாயருக்குக் காட்சி கொடுத்து, வேய்ங்குழல் இசைத்தவாறே எம் அருகே அணைந்திடுவாய் என அருளினார். ஆனாயர் எம்பெருமான் அருகிலேயே அமர்ந்து வேய்ங்குழல் இசைக்கும் பேறுபெற்று இறையடி சேர்ந்தார்
.
                                                                                                 ஓம் நமசிவாயம்

Comments