04. அரிவாள்தாய நாயனார்


அரிவாள்தாய நாயனார்

சோழவளநாட்டில் எல்லாவளங்களும் ஒருங்கே பெற்ற தலமான கணமங்கலம் என்னும் ஊரில் வேளாண்மரபில் தாயனார் என்னும் சிவனடியார் அவதரித்தார். இறைவனுக்கு சம்பாஅரிசி அமுதும், செங்கீரையும், மாவடுவும், நிவேதனப் பொருட்களாக தினமும் தவறாமல் கோவிலுக்கு அளித்து மகிழ்வதை ஒரு கோட்பாடாக கொண்டு விளங்கினார். கணவனைப்போல மனைவியும் சிவத்தொண்டை சிரமேற்கொண்டு திகழ்ந்தார். இடைவிடாமல் இறைப்பணி செய்யும் இவர்களுக்கு வறுமை வாய்த்தது. வருமையைக்கண்டு மனம் கலங்கவில்லை. தாம் செய்துவந்த தெய்வத்திருப்பணியை எப்பாடுபட்டும் தொடர்ந்தார். வறுமையின் பிடி மேன்மேலும் இறுகியது. கூலிக்கு ஆள்வைத்து வேலை வாங்கிய நிலை மாறி, இவரே கூலி வேலைக்குச்சென்று பிழைக்கும் நிலை ஏற்பட்டது. சிந்தை மாறினாரில்லை. கூலியாக கிடைக்கும் செந்நெல்லை இறைவனுக்காகவும், கார்நெல்லைத் தனக்காகவும் பயன்படுத்திக்கொண்டார். ஈசனின் சோதனை மேலும் இறுகியது. அதன் பயனாய் இவருக்கு கூலியாக முழுவதும் செந்நெல்லே கிடைத்தது. நாயனார் வருந்தவில்லை. பெருமகிழ்வோடு முழுநெல்லையுமே கோயிலுக்கு அர்ப்பணித்து சிந்தை மகிழ்ந்தார். குடும்பத்துக்கு அரிசி இல்லாமல் போகவே கீரையைச் சமைத்து உண்ணத்தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்படவே, தண்ணீரைக்குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டனர். இறைவனுக்கு இடைவிடாது படைக்க செந்நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்வோடு தம்பதியர் தம் கடமையை செவ்வனே ஆற்றினர்.

ஒரு நாள் இறைவனுக்குப் படைக்க செந்நெல், கீரை, மாவடு, முதலியவற்றை ஒரு கூடையில் வைத்து சுமந்து சென்றார். பசிமயக்கத்தால் சோர்வுற்றார். அவருடன் அவருடைய மனையாளும் நடக்கமுடியாமல் தள்ளாடிச் சென்றார். ஒரு நிலையில் சோர்வு மேம்பட்டு அடியார் தள்ளாடி கீழே விழ முற்பட்டார். அம்மையார் அவரைத் தாங்கிக்கொண்டார். ஆனாலும் தலையிலிருந்த கூடை கீழே விழுந்து, நிவேதனப்பொருட்கள் தரையில் சிதறின. நாயனார் மனம் மிகக்கலங்கி நொந்துபோனார். நிவேதனப்பொருட்களை இழந்து கோயிலுக்கு சென்று என்ன பயன் என்று உள்ளம் வருந்தி, உயிர்விடத்துணிந்து தன் கையிலுள்ள அரிவாளால் தன்னை அறுத்துக்கொள்ள முற்பட்டார். அம்மையார் செய்வதறியாது தவித்து நெஞ்சுறுக இறைவனை வேண்டினார். 

அடியாரின் அன்புக்கும், பக்திக்கும், கட்டுப்பட்ட கயிலைநாதன் தொண்டரைத் தடுத்தாட்கொள்ள எண்ணினார். நிவேதனப்பொருட்கள் சிந்திய இடத்தில் பூமிக்கு அடியிலிருந்து ஒரு கை வெளிப்பட்டு, அடியாரின் கையைப் பற்றியது. அரிவாள் தானாக நழுவி நிலத்தில் வீழ்ந்தது. இறையின் ஸ்பரிசத்தில் மெய்யுருகி நின்ற நாயனார் பூமியிலிருந்து டக் டக் என்னும் ஒலி வருவதைக் கேட்டார். வெள்ளியம்பலவாணன் மகிழ்ச்சியுடன் தன் நிவேதனத்தை ஏற்றுக்கொண்டதை உணர்ந்தார். உடனே தம்பதிகள் இருவரும் நிலத்தில் வீழ்ந்து ஐயனை வழிப்பட்டனர். எல்லாம் வல்ல ஈசன் அம்பிகையுடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து ஆட்கொண்டார். அரிவாளால் தம் கழுத்தை அரியத் துணிந்ததால் தாயனார் என்னும் பெயருடன் அரிவாள் தாய நாயனார் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது .

ஓம்  நமசிவாயம்.

Comments