18. வாயிலார் நாயனார்



வாயிலார் நாயனார்

                மயிலாபுரி தொண்டைநாட்டிலுள்ள ஓர் சிறப்புற்ற ஊராகும். இப்பதி கடல்வளத்தையும் இறை அருளையும் ஒருங்கே பெற்று சீரும் சிறப்புடன் விளங்கியது. இப்பதியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் கபாலீசுவரர் ஆவார். அம்பிகை கற்பகவல்லித்தாயார். இறைத்தொண்டே இதயமெனக் கொண்ட வாயிலார் நாயனார் வேளாள குடியிலே இத்தலத்தில் அவதரித்தார்.  சிவபெருமானை தன் மனதினிலே எப்பொழுதும் நிலைநிறுத்தி அவருடைய திருநாமத்தை உள்ளத்தால் ஆராதித்து வந்தார்.

                இவர் பேசும் திறனற்றவர் என்ற ஒரு கருத்தும் உண்டு. இவர் இறைவனுக்கு கோயில் எழுப்ப நினைத்தாலும், பொருள் இன்மையால், மனதிலேயே ஒரு ஆலயத்தை அமைத்துக்கொண்டார். பொன்னாலும், மணியாலும் ஆன சுற்றுச் சுவர்களால் மனக்கோயிலை அமைத்தார். அவர் மனமே கோயிலாகவும் தன்னை உணர்தலே அதன் விளக்காகவும் தன்னுடைய அளவற்ற அன்பினையும் பக்தியையுமே சிவலிங்கத்திற்கு அபிஷேகப் பொருளாகவும் கைக்கொண்டார். இரவு பகல் பாராது, மழை வெயில் நோக்காது, ஊண் உறக்கமின்றி எபோழுதுமே இறைவனை மனதினில் நிறுத்தி வழிபட்டு வந்தார்.

                தம் உணர்வினாலேயே அவ்வொப்பில்லா மாணிக்கத்தைப் பேணி வந்தார். இத்தகையச் சிறப்பு மிக்க அடியாரின் பக்தியில் மெய்மறந்து ஆலவாயன் அவரைத் தன்னுடைய திருவடி நீழலைச் சேரும் அருள் புரிந்தார். அடியார்க்கு அடியார் இறைவனே என்பதை மெய்ப்பித்தார்.

ஓம் நமச்சிவாய

Comments