00. அணியுரை



   



பக்தி என்பது இறைவன் மீது கொண்ட அன்பு, பாசம், நம்பிக்கை, என்று எவ்வாறு வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். இது பெரும்பாலோர் கைக்கொள்ளுவதே. ஆனால் எல்லையில்லா பக்தியுடன், எப்பொழுதும் இறைநினைப்புடன், அவனது திருவடிக்காக எதையும் இழக்கத்தயாராய் இருப்பது பக்தியின் உன்னத மேம்பட்ட நிலை. இதனை அனைவராலும் அடையமுடியாது. அத்தகைய எல்லையற்ற, ஈடுஇணையற்ற பக்தி வெள்ளத்தில் மூழ்கி ஆண்டவனின் திருவடியைப் பற்றிக்கொண்ட குறிப்பிடத்தக்க 63 பெரியோர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எடுத்துரைப்பதே பெரியபுராணம் ஆகும். 

இப்புராணத்தின் பெருஞ்சிறப்பு யாதெனில் இவ்வடியார்கள் கொண்ட குலத்தொழில் யாதாயினும், அதை முன்னிறுத்தியே சிறப்புற்றனர். ஈசனுக்கு முன் அனைவரும் சமம், எவ்வித பாகுபாடும் இல்லை என்பதை திறம்பட எடுத்துரைப்பதே பெரியபுராணத்தின் தனிச்சிறப்பு. இவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்களே நாயன்மார்கள் என சிறப்புடன் அழைக்கப்படுகின்றனர். அநபாய சோழனால் பெருமைப்படுத்தப்பட்டு, சிவபெருமானால் *உலகெலாம்* என்று அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு இத்தொண்டர் வரலாற்றைப் படைத்தவர் சேக்கிழார் பெருமான். 

அன்புமலரின் தேனைப் பருகுங்கள், அன்பெனும் ஜீவநதியால் மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள், கூறான ஆயுதத்தால் பிறவித்தளையை வெட்டி எறியுங்கள். பெரியபுராணத்தை சிந்தை சிதறாது சீருடன் படித்தால் மேலே குறிப்பிட்ட அனுபவங்களைப் பெறலாம் என்பது ஒரு செய்தி. 

வைரத்தை தீட்டத்தீட்ட எவ்வாறு ஒளிபெறுமோ, சந்தனத்தை அரைக்க அரைக்க எவ்வாறு நறுமணம் வீசிடுமோ, சங்கைச் சுட சுட எவ்வாறு வெண்மை பளிச்சிடுமோ, பாலைக் காய்ச்சக்காய்ச்ச எவ்வாறு சுவை கூடிடுமோ, அவ்வாறே சோதனைகளை அடுக்கடுக்காக கொடுத்து கொடுத்து அடியவர்களை சாதனையாளர்களாக்குவதே அந்த அம்பலத்தானுக்கு மிகப்பிடித்த செயல். இப்படி புடம்போட்ட தங்கம் போல் சீர்பெற்ற பெரியபுராணத்தின் நாயகர்களைப்பற்றி நான் படித்தவற்றை உங்களுடன் எளிமையான நடையில், கதைவடிவில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எல்லாம் வல்ல ஈசன் இம்முயற்சிக்கு அருளட்டும் .



திருச்சிற்றம்பலம்.




Comments