இந்து மார்க்கம் அது இனிய மார்க்கம்






இந்து மார்க்கம்   அது   இனிய மார்க்கம்


வாழ்வின் நெறிமுறை அனைத்தையும் வடிவெடுத்துக் கொடுப்பதே இந்து மதத்தின் தனிச்சிறப்பு. இம்மார்க்கத்தின் முக்கிய நோக்கம் வாழ்க்கையின் சகல பகுதிகளையும் சுட்டிக்காட்டுவதே. லெளகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்துமதத்தின் நோக்கம். லெளகிக வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பந்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞாநியாக்குகின்றது. லெளகிக வாழ்க்கையையும் தெய்வநம்பிக்கையையும் ஒன்றாக இணைத்துப்பார்க்கிறது இந்து மார்க்கம். வேறெந்த மதத்திலும் இல்லாத சிறப்பு இறைவனைக் கணவன் மனைவியாக காண்பதே.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்  நம்பினார் கெடுவதில்லை  நான்கு மறைதீர்ப்பு என்ற சொற்றொடர்கள் தெய்வத்தின்பால் பிடிப்பை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கையினை கர்மகாண்டம்  ஞானகாண்டம் என்று பிரித்துப் பார்க்கிறது இந்து சமயம். யாக்கை நிலையாமையை இந்து சமய தத்துவ ஞாநிகள் அடிக்கடி நினைவு கூர்வது மனிதனை விரகத்தி அடையச்செய்யும் முயற்சி அல்ல. வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்கி நேர்வழியில் செல்லுமாறு செய்வதற்கே.

இந்து சமயத்தில் வணங்கப்படும் அனைத்து இறைவனுக்கும் ஏதாவது ஒரு விலங்கினத்தையோ அல்லது பறவையினத்தையோ வாகனமாக உருவகப்படுத்தியிருப்பார்கள். ஆழ்ந்து ஆராயின் இதன் உண்மை நன்கு விளங்கும். ஆண்டவனை மட்டுமின்றி அவரால் படைக்கப்பட்ட உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்ற ஓர் மகத்தான உண்மையை வெளிப்படுத்துகின்றனர். விலங்குகளுக்கு உண்டாக்கும் ஊறுகளைத் தவிர்க்கவேண்டும் என்பதே மறைந்த செய்தி.

இந்து சமயம் ஒன்றுதான் ஜனநாயக கோட்பாட்டினையும் சகிப்புத்தன்மையையும் தன்னகத்தேக் கொண்டு தனிச்சிறப்புடன் தளிர்நடை போடுகின்றது.இந்து சமயத்தில் பிறந்த ஒருவன் தன்னுடைய விருப்பப்படி விரும்பிய இறைவனை வணங்கலாம் தொழலாம் வழிபடலாம் தடையேதும் இல்லை. கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம் கோயிலுக்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தபடியே தொழலாம். அறியாமையைப் பயன்படுத்தி கல்வியையும் செல்வத்தையும் முன்னிறுத்தி கட்டாய மதமாற்றம் இந்து மதத்திலா நடைபெறுகின்றது?

இன்று பிற  மதத்தை தழுவியுள்ள பெரும்பாலோர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பல தலைமுறைகளுக்கு முன்பாக இந்து சமயத்தைப்  பின்பற்றியவர்களே. ஒவ்வொரு காலகட்டங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளாலும் நிர்பந்தங்களாலும் வேற்று மதத்தை தழுவியவர்கள்தானே. இந்துமத செயல்பாட்டில் எல்லாம் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. உதாரணமாக வீட்டு வாசலில் கருக்கலில் சாணி நீரைத் தெளித்து அரிசிமாவு கோலம் இடுவர். சாணிநீர் கிருமிநாசினியாக செயல்படும். அரிசிமாவு அணில் காகம் போன்ற உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படும். பல பழக்க வழக்கங்கள் அறிவியலைச் சார்ந்தே அமைந்துள்ளன. நம்மால் அதை உணர முடியாவிட்டாலும் உதாசீனப்படுத்தவேண்டாம்.

இந்துமத நூல்கள் காப்பியங்கள் காவியங்கள் வாழ்வின் நெறிமுறைகளையும் நிலையாமையையும் நல்வழியினையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. உடலில் பட்ட காயம்  மறையும்  ஆனால் உள்ளத்தில் பட்ட காயும் மறையாதது. எனவே பிறரைப் புண்படுத்தலாகாது என்ற மேன்மையான கருத்தைப் பகருகிறது இந்து மார்க்கம். இதுவே இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கு அச்சாரம். எனவே பிற மத நண்பர்களே அரசியல் தலைவர்களே பன்முக சிறப்புவாய்ந்த இந்து மார்க்கத்தின் சீரினையும்  சிறப்பினையும் எடுத்துரைக்காவிட்டாலும் சிந்தை பிறழி சீர்கெட்டுப்பேசி இந்துக்களின் மனதைப் புண்படுத்தாதீர். ஓட்டுக்காக இந்து மதத்திற்கு வேட்டு வைக்காதீர் என இறைஞ்சி இந்து மக்களை சிலுப்பி நாட்டின் அமைதியைக் கெடுக்காதீர் என வேண்டுகிறேன். 
  

                                                         அன்பன்

                                                     இரா.மு.குமரன்   


Comments