20. கழற்சிங்க நாயனார்


கழற்சிங்க நாயனார்
பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்னும் மன்னன் நீதிநெறி தவறாது ஆண்டுவந்தார். இவர் ஓர் தீவீர சிவபக்தர். வடநாட்டு மன்னர்களை வெற்றி கண்டு பொன்னும் ,பொருளும் பெருமளவில் சேர்த்தார். இவ்வாறு தாம் கொணர்ந்த செல்வத்தை இறைவழிப்பாட்டிற்கும் தொண்டர்கள் வழிப்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தார். ஒரு சமயம் திருவாரூர் தியாகராச பெருமானை தரிசிக்க தம் துணைவியாருடன் திருவாரூர் ஏகினார். திருவாரூர் உறை பெருமான் சன்னதியில் தம்மை மறந்து உள்ளம் உருக தொழுது கொண்டு இருந்தார். அரசமாதேவி கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்து அதன் சிறப்புக்களையும் மலர்சோலைகளையும் அழகிய மண்டபங்களையும் கண்டு களித்து வந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் மண்டபத்தில் இறைவனுக்கு மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு தன்னை மறந்து நின்ற தேவி கீழே கிடந்த மலர் ஒன்றை எடுத்து முகர்ந்தார்.
இதைக் கண்ணுற்ற செருத்துணை நாயனார் என்ற அடியார் மிகக் கோபம் கொண்டார். இறைவழிப்பாட்டில் யாராகிலும் தெரிந்தோ தெரியாமலோ அபச்சாரம் செய்தால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே மிகுந்த சினத்துடன் தேவியாரின் கைப்பற்றி, வாசனையை முகர்ந்த அரசியாரின் மூக்கினை வாளால் சீவி விட்டார். அரசியார் மயக்கமுற்று மண்ணிலே சாய்ந்தார். இச்செய்தி இறைவழிப்பாட்டில் மூழ்கியிருந்த மன்னரின் செவியை எட்டியது. விரைந்து அவ்விடத்தை அடைந்தார் மன்னர். துடித்து துவண்டு நிலத்திலே வீழ்ந்து கிடக்கும் தேவியைக் கண்டதும் கண்களில் கனல் பறந்தது. மிகுந்த சினத்துடன் இச்செயலை செய்தது யார் எனக் கேட்டார். செருத்துணை நாயனார் மன்னர் முன் வந்து மன்னா இச்செயலை செய்தது நான் தான் என்று மறுமொழி பகர்ந்தார். சைவத்திருக்கோலத்தில் இருந்த அடியவரைப் பார்த்ததும் மன்னவன் அடியவர் ஒருவர் இச்செயலை செய்யுமளவிற்கு எம் தேவி என்ன பிழை செய்தாளோ என்று எண்ணத் தொடங்கினார். 
வேந்தனின் மனவாட்டத்தை உணர்ந்த அடியார், அரசியார் இறைவனுக்குரிய மலரை முகர்ந்ததால் இத்தண்டனை கொடுக்க நேரிட்டது என்றார். நிலைமையை ஒருவாறு உணர்ந்துகொண்ட மன்னன், அடியவரைப் பணிந்து அடியவரே நீர் முறைப்படி தண்டிக்கவில்லை, மலரை எடுத்த கையை அல்லவா வெட்டவேண்டும் என்று கூறி தன் உடை வாளை உருவி அரசியாரின் கையை வெட்டி சாய்த்தார். அரசரின் இணையற்ற பக்திநிலைக் கண்டு செருத்துணை நாயனார் அவரை வணங்கி தொழுதார். ஈடில்லா பக்தனின் அல்லலைக் கண்டு அல்லலுற்ற அம்பலவாணன் உமா தேவியுடன் இடபவாகனத்தில் விண்ணிலே தோன்றி அவர்களுக்கு காட்சியளித்து அரசியாரின் துயரத்தைப் போக்கி பழைய நிலை அருளி, அனைவருக்கும் அருள் புரிந்தார். கழற்சிங்க நாயனாருக்கு திருவருள் புரிந்து ஆட்கொண்டார்.
திருச்சிற்றம்பலம்

Comments