01. அதிபத்த நாயனார்





01. அதிபத்த நாயனார் 

                        
                              பாரதத்தின் கிழக்கு கோடியில் தொன்றுதொட்டு சிறப்புடன் விளங்கிவரும் துறைமுகப்பட்டிணம் நாகப்பட்டிணம். கடற்கரை  ஒட்டியுள்ள  பகுதிகளில் பெருவாரியாக வாழும் மீனவ இனத்தைச் சேர்ந்தவர் அதிபத்தர். மீனவ குழுக்களுக்குத் தலைவராகவும், பெரும்படகுகளுக்குச் சொந்தகாரராகவும் திகழ்ந்தார். பெரும் சிவபக்தர். மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வலையில் அகப்படும் முதல் மீனை சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்று கடலிலேயே விட்டுவிடுவதை ஒரு கோட்பாடாக கொண்டவர்.

     சிவபெருமான் இவருடைய எல்லையற்ற பக்தியை உலகறிய உணர்த்த திருவுள்ளம் கொண்டார். தம்முடைய திருவிளையாடலைக் காட்டத்துவங்கினார். முதலில் ஏராளமான மீன் கிடைக்கப்பெற்ற நாயனாருக்கு, காலம் செல்லச் செல்ல மீன்கள் கிடைப்பது குறைந்தது. ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு மீன் தான் கிடைக்கும் என்ற நிலை உருவானது. அதனையும் ஆலவாயனுக்கே அர்ப்பணித்துவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்புவார். கைப்பொருள் குறைந்து வறுமை வாட்டத்துவங்கியது. அப்பொழுதும் தன் பக்தியோடு இயைந்த கொள்கையிலிருந்து விலகினார் இல்லை.

      இவ்வாறிருக்க ஒரு நாள் அவருடைய வலையில் விலைமதிப்பற்ற ஒரு  பொன்மீன் சிக்கியது. அது நவமணி இழைத்த செதில்களுடன் மின்னியது. இதைக் கண்ட மற்ற வலைஞர்கள், அவரிடம் இப்பொன்மீனைக்கொண்டே இழந்த உம் செல்வத்தை மீண்டும் பெற்று சுகமாக வாழலாம் என்றார்கள். அவர்களது வார்த்தைகளுக்கு சற்றும் செவி மடுக்காத அதிபத்தர், எம்பெருமானுக்கு அர்ப்பணிக்க இப்பொன்மீன் கிடைத்ததே என்ற எல்லையற்ற மகிழ்ச்சியில் அப்பொன்மீனை மறுபடியும் கடலிலேயே வீசீ இறைவனுக்கு அர்ப்பணித்தார். இச்செயலை அனைவரும் வியந்து நோக்கும் பொழுது தில்லைக்கூத்தன் உமையவளுடன் வானவீதியில் காட்சியளித்து, அதிபத்தரின் பக்தியை மெச்சி உலகோர் வியக்க சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அளித்து மறைந்தார்.

              
                                                                                        ( திருச்சிற்றம்பலம் )

Comments